நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை?

Sunday, 10 August 2014
        (பதினைந்து நாட்களுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு 'தி இந்து' நாளிதழில் பெப்சி இந்திராநூயி பற்றி தாமரை ஒரு பத்தி எழுதி இருந்தார். அதுபற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்றது 'தி இந்து'.
       நானும் பங்கேற்றேன். இன்றைய 'தி இந்து'வில் அக்கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனக்குத் தோன்றியதை பகிர்ந்தேன். என் மின்னஞ்சலில் அவர்கள் வெட்டியதை  வண்ண எழுத்துக்களாய் நான் ஒட்டி இருக்கிறேன் இப்பதிவில். )

“உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே” - சில வார்த்தைகள்
(தி இந்து-தமிழ்ப்பதிப்பு-ஞாயிறு, ஜுலை-27, 2014, முன்வைத்து )

காலம்காலமாய் ‘வினையே ஆடவர்க்கு உயிர்' என்று கற்பிக்கப்பட்டு வந்ததொரு சமுதாயத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் படுமளவு ஒரு பெண் முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை பெருமையுடன் பார்க்கும் அதே சமயம், ஒரு ஆணின் பரிபூரண சுதந்திரத்தை அடைய இன்னும் பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஆமோதிக்கவே வேண்டியிருக்கிறது.


  இச்சம்பவத்தில் இந்திராவின் அம்மா கூறுவது போல், எந்தவொரு பெண்ணும்  தனது இல்லறக் கடமைகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் குறைக்காமல் தான் இன்னபிற செயல்களில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகிறது.
இந்திராவின் அம்மாவுக்கு மருமகனிடம் வேலை சொல்வதை விட மகளிடம் உரிமையோடு கேட்க சவுகர்யமாய் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்.
9.30 வரை அலுவலகப் பணியாற்றும் பெண், ஒருநிமிடம் வாகனத்தில் சென்று வீட்டுக்கான தேவையை செய்ய மலைக்க மாட்டார். அவரின் ஆதங்கமெல்லாம் தன் பதவி உயர்வுக்கான மகிழ்வை வீட்டினரிடம் கண்டவுடனே பகிர்ந்து குதூகலிக்க முடியாமல் போனதாகவே இருக்கும்.

       இரவுப்பணிக்கு சென்று காலை ஏழு மணிக்கு மேல் பத்து கிலோமீட்டர் பயணித்து வீடு வரும் எனது கணவரை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும்போது ஒரு பாக்கெட் பால் வாங்கி வரப் பணித்திருக்கிறேன். தன் பதவியையோ அந்தஸ்தையோ கெளரவத்தையோ மனதில் கொள்ளாமல் அவரும் வாங்கி வருவது சர்வசாதாரணமாகவே நடப்பது.
ஒரு பெண்ணானவள் எந்நிலையிலும் அகந்தையோ கர்வமோ கொள்வது அவளது இயல்பு வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தாயாக மகளுக்கு கொடுக்கும் உபதேசமே ‘உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே'.

         எழுத்தாளர் அ.வெண்ணிலா சிலமாதங்களுக்கு முன் ‘தோழி' பத்திரிகையில் எழுதியதொரு கட்டுரையில் தன் வீட்டுக்கடமைகள் பெரும்பாலானவற்றை தன் தாயார் ஏற்றுக் கொள்வதால் தான் நினைத்த நேரங்களை எழுதுவதற்கும் இன்னபிற ஆக்கங்களுக்கும் உபயோகிக்க  முடிவதாக எழுதியதை வாசித்தேன். பெண்ணுக்கான குடும்பப் பொறுப்புகளின் விடுதலையும் இன்னொரு பெண்ணின் சுமையாகவே இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதையும் அதில் சுட்டியிருப்பார்.  நானும் நினைத்தேன், அது அவளின் அம்மாவாக இருக்கலாம்; பணிப்பெண்ணாக இருக்கலாம்; மாமியாராகக் கூட இருக்கலாம்!

         எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது! குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்.

நன்றி: 10.08.2014 'தி இந்து' - பெண் இன்று .


14 கருத்துரைகள்:

 1. குறிப்பிட்ட பதிவை வாசித்திராததால் முழுமையான விவரம் என்னவென்று தெரியவில்லை. எனினும் உங்கள் கருத்துகள் முற்றிலும் வரவேற்கப்படவேண்டியதே. வெட்டுதல் இல்லாமல் வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 1. @கீத மஞ்சரி

  ஆம் தோழி. அதைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு நான் தந்திருக்க வேண்டும்.

  பெப்சிகோ நிறுவன சி.இ.ஓ. ஒரு இரவு 9.30 மணிக்கு அலுவலகப் பணியிலிருந்த இந்திரா நூயியை அழைத்து அவரை நிறுவன அதிபராக நியமித்திருப்பதாகத் தெரிவிக்க, அதைப் பகிரும் மகிழ்வோடு வீடு வந்த இந்திராவை வாசலில் வழிமறித்த அவரது தாயார் வீட்டுக்காக பால் வாங்கிவரப் பணித்திருக்கிறார். முன்னமே வீடு வந்திருந்த இந்திராவின் கணவரை வாங்கி வரக் கேட்டிருக்கலாமே என்றதற்கு, தாயார், அவர் களைப்பாக வந்தார் என்றிருக்கிறார். பால் வாங்கி வந்த இந்திரா, நான் பெப்சிகோ வின் தலைவராகியிருக்கிறேன்; என்னைப் பால் வாங்கிவரச் சொல்கிறாய், என்ன அம்மா நீ? என்றதற்கு, உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே என்றாராம் அவரம்மா. "நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால், மனைவி, பெண், மருமகள், அம்மா எல்லாமே நீ தான். அந்த இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது" என்றாராம்.

  சரிதானே அவர் சொன்னதும்.

 1. முழுமையாக இல்லாவிட்டாலும் மிகவும் அருமை. [பொதுவாகப் பெண் என்பவள் முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வது இல்லை அல்லவா ! ;))))) அதனாலும் இருக்கலாம்] எனினும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

 1. வணக்கம்

  ...ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்...
  உணமைதான்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 1. குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண் ????...

 1. எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது

  உயிர்த்துடிப்பான பகிர்வுகள்..!

 1. ரொம்ப நாட்களுக்குப்பிறகு நிலாவிடமிருந்து ஒரு அழகிய பதிவு! ஹிந்துவில் உங்கள் கருத்துக்கள் வெளியாகி இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் நிலா!

 1. நிறைய 'கலப்படம்' இருக்கிறது இந்திரா நூயி பற்றிய செய்திகளில். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையை (?) நான் படிக்கவில்லை - ஆனால் அவர் ஒரு பெரிய கம்பெனியின் தலைவராக இயங்க நிறைய பேர் - அவர் கணவர் உட்பட தியாகங்களும் அநுசரணையும் செய்திருக்கிறார்கள். பால் வாங்கி வா என்று அம்மா பணித்தது - நம்பவே முடியாத ஒன்று. சாதாரணமான வீட்டில் கூட இது அவ்வளவாக நடப்பதில்லை - பெப்சியின் சிஇஓ - வாய்ப்பேயில்லை. ஆனால் இப்படி எழுதினால் தான் sensationalஆக இருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் ஏதாவது எழுதிவிடுகிறார்கள். இதைப் பாரம்பரியம் என்பதில் ஒரு 'destructive romanticism' இருப்பதால் படிக்கும் நமக்குள்ளும் ஒரு 'அட!' உணர்வு உண்டாகிறது. இந்திரா காந்தியைப் பற்றியும் இப்படி ஒரு கலப்படச் செய்தி செயற்கையாக அவரை humanize செய்யும் முயற்சியில் எழுதப்பட்டது. உண்மையில் இந்திரா நூயி பற்றி பெருமைப் பட வேண்டிய அவசியம் அவர் பாரம்பரிய கலாசார விதிகளுக்குட்பட்ட ஒரு பெண் எனபதால் அல்ல என்பதை அறிந்து கொள்ளும் பொழுது இது போன்ற cheap shots அவருடைய பெருமையை மாற்றுக் குறைப்பதும் புரியும்.

  நுரையீரல் வேலையை நுரையீரல் செய்கிறது - படிக்கும் பொழுது தைக்கிறது என்றாலும் நூயியீரல் வேறே கதை.

 1. @அப்பாதுரை

  'கட்டு உரை' :)))

  பரபரப்புக்கான பத்திரிகை தந்திரம் என்பது சரியே அப்பாஜி.

  வாசகர்கள் கருத்தைக் கேட்டு, தங்களுக்கு ஏற்ற கருத்தை எடுத்து வெளியிடுவது நெருடல் எனக்கு.

  பெண்ணோ ஆணோ - குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்றி தன் துறையில் சிறப்புற இயங்குவது இயலாத ஒன்றே.

  'நல்ல வேளை, அம்மா சொன்னதாக போட்டாங்க.மாமியார் சொல்லியிருந்தா ...' (இதை சொன்னது எங்க இல்லத்தரசர்)

  இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது இதில்.

  உங்க பார்வையின் கோணம் (நூயியீரல்) மறுக்கத் தக்கதல்ல.

  அவர் பாரம்பரிய கலாச்சார விதிகளுக்கு உட்பட்டதொரு பெண் என்பதற்காக அல்ல நானும் அவரைப் பற்றிப் பெருமைப் பட்டது.

  ஏதோவொரு நேர் காணலில் எதற்கோ சொன்ன பதிலை தங்களுக்கு சாதகமாய் திரித்து பெரிதுபடுத்தப் படுவது எனக்கும் புரிகிறது.

 1. @மிருணா

  கேள்விக்குட்படுத்துவதும், ஏற்றுக் கொள்வதும் அவரவர் பாங்கு. நம் கருத்துக்கும் நடைமுறைக்கும் இடைவெளிகள் உண்டுதானே தோழி?!

 1. @வை.கோ. சார்...
  @ரூபன்..
  @இராஜ இராஜேஸ்வரி..
  @மனோ மேடம்...

  வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி!

 1. கட்டு உரை - அட்டகாசம் போங்க. இதைப் பயன்படுத்திக்க அனுமதி கொடுங்க.

 1. மாமியார் சொன்னதா... insightful. கண்டிப்பா அது இன்னொரு பரபரப்பின் அடிப்படையாகியிருக்கும்.

 1. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar