நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

வன்மம் தவிர்

Monday, 10 March 2014
தோலுரித்துத் தொங்கும்
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்

கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...

திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...

வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...

சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை

குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.


10 கருத்துரைகள்:

 1. இப்படித்தான் ஆரம்பம் ஆகிறதோ...? என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

 1. வளர்ந்தது பல்லியின் வால். மட்டும் அல்ல வன்மமும் தானோ...!

 1. என்றாலும் மனதில் எஞ்சி இருக்கும் பரிவுணர்வு இங்கே கவிதையாய். மனப் போராட்டத்தை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நிலாமகள். அருமை.

 1. அன்பும் கருணையும் கொண்ட மனங்களிலும் சில வேளைகளில் வன்மம் தவிர்க்கவியலாததாகிப் போகிறது. பூசி மெழுகும் மனங்களுக்கு மத்தியில் எவ்வித அரிதாரமுமற்ற அழகுக் கவிதை. பாராட்டுகள் நிலாமகள்.

 1. வளர்ந்தது வால்......

  பல சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறதோ நம் மனதில்.....

  நல்ல கவிதை. பாராட்டுகள்.

 1. ’நாம நம்ம கன்னத்தில அடிச்சுக்கிட்ட எப்பிடி வலிக்கும்னு நேத்து ஒரு கொசு கத்துக் குடுத்திச்சு’ என்று ஒரு வணிக சஞ்சிகையில் ஃபேஸ்புக் பக்க செய்தி ஒன்று பார்த்தேன்.

  ஒரு அனுபவம் கவிதையாய் மலர்ந்திருக்கிறது நிலாவுக்கு.

  பாராபட்டம் இன்றி பெய்கிறது அனுபவம் என்னும் பெருமழை. விதைகள் முளைக்கின்றன அதனதன் வீரியத்தோடு.

  கவிதை அழகு நிலா.

 1. யாரங்கே கடவுளா...? இல்லை கவுளி. ஹூம்.

  பற்பசைக்கு இப்படி ஒரு பயனா?!

 1. kannan said...:

  தோழியாரே, நலமா?
  நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் வலைக்கு வந்தேன். கவிதை அருமை, as usual. மனிதனின் மனத்திற்குள் மிருகமும் இருக்கிறது, கடவுளும் இருக்கிறான்(ள்) என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். திருக்குறளுக்கு பலர் அவரவர் புரிதலின் அடிப்படையில் உரை எழுதியதுபோல உங்களது கவிதைக்கும் வித்தியாசமான விமர்சனங்கள் (என்னையும் சேர்த்துதான் :-)
  உங்களது வார்த்தை கையாடல் அருமை, as usual.
  வாழ்த்துக்கள் தோழியாரே....
  கண்ணன், தஞ்சையிலிருந்து

 1. Kalayarassy G said...:

  கடித்து விட்டுப் பறந்த குளவியைப் பல்லி விழுங்க, குளவியைப் பழி வாங்கிய திருப்தி நமக்கு. கருணை உணர்வு கொண்ட மனிதனிடமும் அடிமனதில் பழிவாங்கும் எண்ணம் உறங்கிக் கிடக்கிறது என்ற உண்மையை வெளியிடும் அழகிய கவிதை. பாராட்டுக்கள்!

 1. yathavan nambi said...:

  அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!
  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (S'inscrire à ce site
  avec Google Friend Connect)

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar