நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

அகழ்வாரைத் தாங்(க்)கும் நிலம்

Thursday, 7 March 2013

உயிர் போகும் வரை கழுத்தில்
கயிறு இறுக்கி என்னைச் சாகடி

வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து
முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை

முழுக்குப்பி திராவகத்தை
எனை நோக்கி வீசியெறி

மண்ணெண்ணையால் என்னைக் குளிப்பாட்டி
ஒற்றைத் தீக்குச்சியால் உடல் கொளுத்து

கனரக வாகனத்தை கடும் வேகத்தோடு மோதி
என்னைச் சிதறடி

நள்ளிரவு உறக்கத்தில் தலையணையால் நாசியடைத்து
உடலைக் கட்டையாக்கு

ஆவேச உச்சத்தில் அடித்து துவம்சித்து
நார் நாராய் கிழி எனதுடலை

ஐந்தாறு மனிதக் கழுகுகளோடு
என் சதைபிய்த்து உன் பசியாற்று

நவீன கொலைக்கருவிகளால் 
ஒருநொடியில் உயிர்போக்கு

நயவஞ்சக நரிமுகம் காட்டி
தினமொரு சித்திரவதை செய் என்னை

என்னைத் துண்டு துண்டாய் வெட்டி
மசாலாதடவி ருசியேற்றி 

கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில்
வறுத்துத் திண் நரபோஜியே

அகழ்வாரைத் தாங்கும் 
நிலமும் ஓர் நாள் 
எரிமலையாக...
கொதிநீர் ஊற்றாக...
உருமாறுவது போல் 

என்போன்றதொரு பெண்ணால்
உயிர்வளர்த்து உடல்வளர்த்த
உன்னையும் பெற்றாளே - அவள்
தன் கருப்பையை கழற்றியெறியட்டும்
இன்றைய கண்ணகியாக...

பொசுங்கிச் சாம்பலாகட்டும்
ஆண் எனும் ஆணவம்.

23 கருத்துரைகள்:

 1. மிகவும் ஆக்ரோஷமான வரிகளுடன் எழுதியுள்ள கவிதை.

  ஆண்கள் அவ்வளவு மோசமானவர்களா?

  ஈவு இரக்கமே இல்லாதவர்களா?

  அப்படியாயின் .........

  பொசுங்கிச் சாம்பலாகட்டும் ஆண் எனும் ஆணவம்.

 1. கருக்கப்பட்ட உதடுகளினின்றும் கழுத்து நெறிக்கப்பட்ட குரல்வளையினின்றும் வெளிவரத்துடிக்கும் வார்த்தைகளை அந்த பரிதாப உள்ளங்களுக்கான குரலாய் அதே வீரியம் பிசகாது ஒலிக்கும் கவிக்குரல். மனம் கனத்துத்தான் கிடக்கிறது. சாடும் இத்தகு சாட்டைகளால் என்றேனும் அழியத்தான் வேண்டும் பெண் என்னும் பேதைமையும் ஆண் என்னும் ஆணவமும். பாராட்டுகள் நிலாமகள்.

 1. உன்னையும் பெற்றாளே - அவள்
  தன் கருப்பையை கழற்றியெறியட்டும்
  இன்றைய கண்ணகியாக...//அருமையான வாதம்

 1. இந்தக் கொடுமைகள் உலகப் பெண்ணினத்துக்கும் பொதுமையானவை நிலா. இதில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.

  இங்கு கடந்த வாரம் ஓரளவு மேட்டுக் குடியினர் வசிக்கும் மலைப்பாங்கான பிரதேசத்தில் (Baulkham Hills)அயலில் உள்ள தன் சினேகிதியின் 18வது பிறந்த தினத்து களியாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் பெண்ணைக் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அவளை கும்பலாகக் கற்பளித்து விட்டு காட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்றிருக்கிறது.

  நம் தேசத்திலோ ஒரு 4 வயதுப் பெண் குழந்தைக்கே பெண்ணாய் வாழ்தலில் ஆபத்து இருக்கிறது.

  நாம் வாழ்வதோ 21ம் நூற்றாண்டின் தொழில் நுட்பயுகம்!

 1. செம தாக்குதல்...

  ஆணவம் யாரிடம் இருந்தாலும் தானே அழிவார்கள்...

 1. @ வை.கோ. சார்...

  சாடுதல்களும் சபித்தல்க்களுமாய் அறம்பாடிய இக்கவிதை அப்படியானவர்களை மட்டுமே சுட்டுகிறது ஐயா. ஒட்டுமொத்த ஆண்களும் அப்படியே இருந்தால் பெண் இனமே அழிந்து மனித குலமே வேரழிந்திருக்குமே...

 1. @ கீத மஞ்சரி...

  //பெண் என்னும் பேதமையும் ஆண் என்னும் ஆணவமும்//

  வரிகளுக்கு கனம் சேர்க்கும் வார்த்தைத் தெளிவு... பெண்கள் தினக் கொண்டாட்டம் இப்படியாகிறது தற்காலத்தில்:(

 1. @கவியாழி கண்ணதாசன்...

  வேதனை உச்சத்தில் எழுவதால் தகிப்பு மிகுகிறதோ...

 1. @ மணிமேகலா...

  இந்தக் கொடுமைகள் உலகப் பெண்ணினத்துக்கும் பொதுமையானவை நிலா. இதில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.//

  பெண்ணாய் வாழ்வதின் ஆபத்து... மிகக் கொடூரம் தான்.

 1. @ திண்டுக்கல் தனபாலன்...

  சரிதான்.

  ஆனால் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறார்களே... பெண் இனத்தின் அவலத்துக்கு இதைப் பொருத்த முடியுமா?

 1. தகிப்பு ....

 1. @ரிஷபன்

  இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்து நினைத்து...

 1. // பொசுங்கிச் சாம்பலாகட்டும்
  ஆண் எனும் ஆணவம்//

  நல்ல சாடல்.....

 1. @வெங்கட் நாகராஜ்

  ஆம் சகோ... உடலமைப்பின் பாகுபாடு மாத்திரம் தானே... ஏனோ சிலரின் வக்கிரம்...

 1. சிறுமைகண்டு பொங்குவாய் என்ர பாரதியின் வரிகளை நினைவு படுத்துகிறது கவிதை.

 1. @கோமதி அரசு

  வருகையும் கருத்தும் தெம்பும் இதமும்.

 1. ஆண் என்னும் ஆணவம் அழியட்டும்...

 1. உக்கிர காளியின்
  ஊழித் தாண்டவம் போல்.

  படிக்கப் படிக்க
  பயமாயிருந்தது.

  உங்களைக் கோபம் கொள்ள வைத்த
  ஆணாதிக்க ஆணவம் அழிந்தொழிந்து போகட்டும்.

 1. அகழ்வாரைத் தாங்கும்
  நிலமும் ஓர் நாள்
  எரிமலையாக...
  கொதிநீர் ஊற்றாக...
  உருமாறுவது போல்

  எரிமலைக் குழம்பு மழையாய்
  பொழிந்தாற்போல் ஆக்ரோஷமனது ..

 1. ஊழித் தாண்டவம். அக்கிரமக் காரர்களுக்கு அந்திம அழைப்பு.
  எண்ணமே இப்படி எரிந்தால், எழுச்சி எப்படி தகிக்கும்?

 1. @ சிவகுமாரன்...

  ஆம் சிவா. ருத்ர தாண்டவத்துக்கு இணை அல்லவா?

  @ இராஜராஜேஸ்வரி...

  ஆம் தோழி. ஆக்ரோஷ மனது ... சொற்களில் இறங்கும் வெப்பம்.

  @ அப்பாதுரை சார் ...

  ஆவேசத்தில் வார்த்தைகளை எறிந்து விட்டு ஆற அமர யோசித்தால், கையாலாகாதத் தனத்தின் கோபக் குமுறலோ என தோன்றுகிறது சார். வேறென்ன செய்ய முடிகிறது எங்களால்? வலி பொறுக்காது அலறுவதைத் தவிர? எழுச்சி வரட்டும்.

 1. ஆக்ரோஷமான, மனதை க‌னக்க வைத்த கவிதை நிலா!

 1. ஆக்ரோஷக்கவிதை.இப்படியுமாய் இருக்கிற மனிதம்,கேள்விக்குறிகள் சுமந்து வாழ்க்கை என்பதை சொல்லி ச்செல்கிற கவிதை. வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar