நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பொங்கல் வேலையெல்லாம் ஆச்சா?

Saturday, 10 January 2015


ஒரு வாரமாக அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர் யாரொருவருக்கும் நேரிலோ தொலைபேசியிலோ பேச்சின் துவக்கம் ‘பொங்கல் வேலை தொடங்கியாச்சா.. முடிச்சாச்சா?' பெண்களின் பேச்சுதான் இப்படி.

ஆண்கள் எப்போதும் போல் தான். ஒருசிலர் வீட்டுப் பெண்கள் கேட்கும் உதவிகளை சுத்தம் செய்யும் வேலையில் செய்யலாம். பணியாள் நியமித்தால் ஊதியம் தரலாம். பொறுப்பும் கவலையும் பெண்களைச் சார்ந்ததே.

வீட்டு வாசல்களில் வெயில் மினுங்க பளபளவென கழுவிக் கவிழ்க்கப் பட்டிருக்கும் வருடத்தின் ஓரிரு சமயங்களில் உபயோகிக்கும் அல்லது வருடக் கணக்கில் உபயோகிக்காத பித்தளை வெங்கல எவர்சில்வர் பாத்திரங்கள்.

வாசலில் அப்போதைக்கப்போது பழைய பேப்பர் வாங்குபவர்களின் சன்னமான குரல்கள். பழைய வீட்டு உபயோகப் பொருட்கள், பழைய துணிகள் இன்ன பிற பழையன எல்லாம் வாங்கிக் கொள்ள ‘குட்டி யானை' வண்டியில் ஒலிபெருக்கியில் பதிவு செய்யப் பட்ட குரலில் கூவலும் தினசரி கேட்கின்றது.

சுமார் 20 தட்டுகளில் ஒரு அறைச் சுவர்கள் முழுதும் கடந்த 20 ஆண்டுகளில்
ஓடி ஓடி (சென்னை-பாண்டி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிகள்) தேடித் தேடி வாங்கிச் சேர்த்து வைத்திருக்கும் எண்ணிக்கையில் ஆயிரங்களையும் ரூபாய் மதிப்பில் இலட்சங்களையும் தாண்டும் எங்க வீட்டுப் புத்தகக் களஞ்சியத்தை தூசு தட்டி மாற்றி அடுக்கினால் பொங்கல் வேலை முடிந்தது எனக்கு. ஒருபோதும் முடிந்ததில்லை. நினைத்தபடி சுத்தம் செய்ய.

படிக்க விடுபட்டதெல்லாம் கண்ணில் பட்டு தனிப் பகுப்பாகும். படித்ததில் சுவையானதிலெல்லாம் மறுபடி அநிச்சையாக கண்கள் மேயும். அடிக்கடி எடுத்துப் படித்து அட்டை பஞ்சையானவை வேறு மேலுறை கேட்கும். அன்றாடக் கடமைகள் தவிர்த்த நாளின் பெரும்பொழுதும் இப்படியே தான். பரணிலிருக்கும் பித்தளைப் பாத்திரங்கள் மங்கித் தான் கிடக்கின்றன. கவலைப்பட யாருமின்றி.

கார்த்திகை மாதத்து கனமழை முடிந்து மார்கழிக் குளிரில் விரைத்துப் போன வீட்டுச் சேமிப்பு தானியங்கள், உணவு சார்ந்தவை எல்லாம் ஒரு காய்ச்சல் போட்டுப் பராமரிக்க  வேண்டியது இக்கால கட்டத்தில் அவசியம் தான். விவசாயிகளுக்கு அறுவடைக் காலத்துக்கு முந்தைய நாட்களில் புதுவரவிற்கு இடம் கொடுக்க பழையனவற்றைக் கழித்தலும் ஒதுக்கலும் தூய்மையாக்கலும் தேவை தான்.

உழவுத் தொழிலில் வருடப் பிறப்பு தை மாதம் தானே. வருமானம் பிறப்பும். கையில் புரளும் காசுக்குத் தக்கவே பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமும்
அவர்களுக்கு.

வரையறுக்கப் பட்ட வருமானமுடையவர்களின் திட்டமிடப்பட்ட வருடாந்திரக் கொண்டாட்டங்கள் சாரமற்றது. பழக்கம் விடுபடாமலிருக்க கொண்டாடப்படும் நகரத்துப் பொங்கல் ருசியற்றது.

இன்று சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருக்கும் என் கணவருடன் வீடடையும் புத்தகங்களுக்காக களஞ்சியத்தை தூய்மையாக்க வேண்டும் நான்.
முடிந்தால் பொங்கல் வேலை எனக்கும் முடிந்தது!


6 கருத்துரைகள்:

 1. ருசியை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது தான்...

 1. vasan said...:

  பொங்கல் வாழத்துக்கள்

 1. vasan said...:

  "பழையன கழிதலும், புதியன புகுதலும்"
  அன்று வயிறுக்கு (தானியங்கள்) சேமிப்பு
  இன்று மூளைக்கு (பத்தகங்கள்) வாசிப்பு

  (முன் பதிவு) பொங்கல் வாழத்துக்கள் அனைவருக்கும்

 1. //எண்ணிக்கையில் ஆயிரங்களையும் ரூபாய் மதிப்பில் இலட்சங்களையும் தாண்டும் எங்க வீட்டுப் புத்தகக் களஞ்சியத்தை தூசு தட்டி மாற்றி அடுக்கினால் பொங்கல் வேலை முடிந்தது எனக்கு. ஒருபோதும் முடிந்ததில்லை. நினைத்தபடி சுத்தம் செய்ய.//

  உண்மை தான். இன்று இவையெல்லாம் மிகவும் கஷ்டமான + சுவாரஸ்யமில்லாத வேலைகளாகவே உணர முடிகிறது.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 1. //வரையறுக்கப் பட்ட வருமானமுடையவர்களின் திட்டமிடப்பட்ட வருடாந்திரக் கொண்டாட்டங்கள் சாரமற்றது. பழக்கம் விடுபடாமலிருக்க கொண்டாடப்படும் நகரத்துப் பொங்கல் ருசியற்றது.//

  மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இருப்பினும் நாமும் ஏதோ இவற்றைக் கொண்டாடித்தான் வருகிறோம். எது எப்படியிருந்தாலும் பொங்கல் நல்ல நெய் மணமாகவும், வறுத்த முந்திரியின் மணம் மூக்கைத்துளைப்பதாகவும் இருந்தால் சரிதான் ! :)

 1. இனிமையான வாழ்த்திற்கும், இனிப்பான பொங்கலுக்கும் வாழ்த்துக்கள் நிலா.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar