நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சாகசங்கள் மீதான பேராவல்

Tuesday, 14 October 2014
Harry Potter and the Sorcerors Stone        

    குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில மாதங்கள் வயிறு நிறைந்தால் கண் செருகி தூங்கிவிடுகின்றன. சமயங்களில் தாலாட்டைக் கேட்டபடி. 
       கால் முளைத்து வீட்டைத் தாண்டி வெளியுலகம் தெரியவரும் பருவம் தொடங்கி அவர்கள் பார்த்த கேட்ட அனுபவித்த பலவற்றின் தொடர்ச்சியாகவும், அவற்றிலிருந்து மாறுபட்ட வியப்பூட்டும் கதைகளாகவும் சொல்லி அவர்களின் உறக்கத்தை வரவழைக்க வேண்டியதாகிறது.  
        தாம் கேட்டு வளர்ந்த கதைகளும் படித்து அறிந்த கதைகளும் போதாத போது புதிது புதிதாக புனைந்துகொள்ள தாய்மனம் ஒவ்வொரு நாளும் எல்லா தருணங்களிலும் விழிப்போடே இருக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்திலிருக்கும் அம்மாவுக்கும் இதே நிலைமை தான்.
     இங்கிலாந்தில் ஜே.கே.ரோலிங் எனும் தாயின் கற்பனையில் உதித்த கதைகள் தான் ‘ஹாரிபாட்டர் கதைகள்'! அந்த இல்லத்தரசி, இக்கதைகள் எழுதியதன் மூலம் தன் நாட்டு ராணியின் சொத்து மதிப்பை விட அதிகமாக சம்பாதித்து விட்டாராம்!! மேலும் பல பிரபல பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள் வேறு!! 
       தன் கணவரோடும் தன் மூன்று குழந்தைகளோடும் எடின்பர்க் நகரில்
வசித்து வரும் அந்த பெண்மணி, இல்லத்தரசிகளின் பெருமைக்குரியவர்!  பொறுப்பையும் கடமையையும் மதித்து வாழ்ந்தால் வீழ்வில்லை என்பதற்கு அடையாளம் அவருக்குக் கிடைத்த எண்ணற்ற விருதுகளும் உலகளாவிய பாராட்டுக்களும்!
         இந்நூலை தமிழுக்குத் தந்த திரு.பி.எஸ்.வி. குமாரசாமியும் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் வசிப்பவர். இவரது 25 ஆண்டுகால மொழிபெயர்ப்பு அனுபவத்தில் 80க்கும் மேற்பட்ட நூல்கள், எண்ணற்ற கட்டுரைகள் (இலக்கியம், சுயமுன்னேற்றம், சுற்றுச் சூழல், பொருளாதாரம், அறிவியல் போன்ற துறைகளில் இருந்து) வெளிவந்துள்ளன. 
       இவர் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், மலையேற்றப் பயிற்சியாளர், புகைப்படம் எடுப்பதில் அலாதி ஆர்வமுடையவர், பயணங்களில் விருப்பமுடையவர் எனும் பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் என்றறிய மகிழ்கிறோம்.
        தனக்குத் தெரிய வரும் நல்ல விஷயங்களை அவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதை சிறந்த இலட்சியமாகக் கொண்டிருக்கும் திரு.பி.எஸ்.வி.குமாரசாமி அவர்களை தலைவணங்குகிறேன் நான். எனக்கும் ஹாரிபாட்டர் கதையை அறிமுகம் செய்வித்தமைக்காக.
       தன் குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையை ஒரு தீய மந்திரவாதியின் சூழ்ச்சியால் இழந்த ஹாரி பாட்டர் தன்னை வெறுக்கும் பெரியம்மா குடும்பத்தோடு அல்லலுற்று வாழ்கிறான். தக்க சமயத்தில் அவனது தாய் தந்தை பயின்ற மாயாஜாலப் பள்ளியிலிருந்து அழைக்கப் பட்டு மந்திரதந்திரங்களைப் பயிலத் தொடங்குகிறான். அவனுடன் பயணிக்கும் கதையோடு நாமும் ஒன்றி விடுகிறோம். 
   இரயில் நிலையத்தின் ஒன்பதேமுக்கால் எண் கொண்ட பிளாட்பாரத்திலிருந்து தொடங்குகிறது நமக்கும் பல ஆச்சர்யங்களும் அதிசய மாயாஜாலங்களும். தவளை மிட்டாயிலிருந்து கிரிக்கெட்டை ஒத்த குவிடிச் விளையாட்டு வரை எத்தனையெத்தனை அற்புதக் கற்பனைகள் நாவலாசிரியை சிந்தையில்! நாவலில் வரும் குவிடிச் விளையாட்டு வர்ணனை நம் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைக்கு சற்றும் குறைவில்லாத விறுவிறுப்போடு உள்ளது.
   நம் குழந்தைகள் தின்பண்டங்களில் விற்பனைக்காக கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், நடிக நடிகைகள் படங்கள் இருப்பதைப்போல் பல புகழ்பெற்ற மந்திரவாதிகளின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அந்த தவளை வடிவ மிட்டாய்களுடன் இருக்கிறது ஹாரிக்கு இரெயிலில் கிடைத்தவற்றுள். 
       ஆல்பஸ் டம்பிள்டோர் எனப்படும் மந்திரவாத பள்ளியான ஹாக்வர்ட்ஸின் தலைமை ஆசிரியரின் படம் ஹாரிக்கு கிடைக்க, அவரைப்பற்றி நமக்கும் அறிமுகப்படுத்துகிறார் ரோலிங். நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுகம் எத்தனை அழகாக துல்லியமாக நிகழ்கிறது என்பதை வாசக மனநிலையிலிருந்தபடியே ஒரு படைப்பாளியாகவும் எண்ணி வியக்கிறேன் நான்.
     டம்பிள்டோரே கதையின் பிற்பகுதியில், ஹாரி அபிலாஷைக் கண்ணாடியில் தன் பெற்றோரையும் முன்னோரையும் கண்டு நெகிழ தினம் தினம் நள்ளிரவில் தொடர்ந்து மூன்று நாட்கள் பல தடைகளையும் தாண்டி சிரமப்பட்டு வந்தபோது, “கனவில் கூடாரம் அடித்து உட்கார்ந்துவிட்டு வாழ மறந்துவிடுவது நல்லதல்ல” என்று இதமாக புத்தி சொல்வது படிக்கும் குழந்தைகள் மனசிலும் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமல்லவா! 
      மேலும், சர்க்கரை தடவிய மருந்து உருண்டை போல நம்ப  முடியாத வியப்பூட்டும் மாயா யதார்த்தவாத எழுத்துக்குள் குழந்தைகளுக்கு வாழ்வின் தத்துவத்தையும் நிதர்சனத்தையும் சில இடங்களில் பொதிந்து வைத்திருக்கிறார் மூல ஆசிரியர். கீழ்க்கண்ட இடங்களை சில சான்றாகக் கொள்ளலாம். 
         ஹாக்ரிட் ஆர்வக் கோளாறில் ஒரு டிராகன் முட்டையை பாதுகாத்து குஞ்சு பொரியச் செய்து, அதன் வளர்ச்சியில் அதை பாதுகாக்கும் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள, ரான் மற்றும் ஹெர்மயனியுடன் ஹாரி அதை ரானின் சகோதரனுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று, அதனால் தன் அணிக்கு 150 புள்ளிகள் தோற்றதோடு, அதிகபட்ச தண்டனையாக தடை செய்யப்பட்ட காட்டில் ஓர் இரவை கழிக்க நேர்ந்த போது சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதன் அவஸ்தையை அனுபவப் பாடமாக கற்ற சம்பவம்.
     தன் எதிரிகளிடத்தில் இரக்கம் காட்டாதது போல் தன் அபிமானிகளிடத்திலும் தன்னலம் கருதி இரக்கம் காட்டாத தீய மந்திரவாதி வோல்டமார்ட்டை- தன் தாய் தந்தை இறப்புக்கு காரணமான, தன்னை அழிப்பதை லட்சியமாக கொண்ட வோல்டமார்ட்டை சின்னஞ்சிறுவனாக எதிர்கொள்ளும் வல்லமையை தன் பெற்றோர் நல்லாசியாலும், தன் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரின் நண்பர்களாலும் ஹாரி பெறுகிறான்.
     ஸ்நேப் தான் வில்லன் என்று படிக்கும் நாமும் எண்ணியிருக்க, காட்சிகளூடே பயணித்த குவிரில் தான் வோல்டமார்ட்டுக்கு அபிமானியாகி ஹாரிக்கு முக்கிய எதிரியாகிறான் என்பது நாவலின் எதிர்பாரா திருப்பம், நிஜ வாழ்விலும் பல நேரங்களில் நாம் நம்பியதற்கு மாறாக நடப்பதை நினைவு படுத்துகிறது.
      டம்பிள்டோரிடம் தீய சக்திகள் தன்னை தீண்டவிடாமல் தடுத்தது எது என்று ஹாரி கேட்க, “வோல்டமார்ட்டால் புரிந்து கொள்ளமுடியாத ஒன்று அன்புதான். உன் அம்மா உன்மீது வைத்திருந்த அன்பின் சக்தி வெளிப்பார்வைக்குத் தெரியாமல் உன்னைப் பாதுகாக்கும் கவசமானது. ஆழமாக நேசிக்கப் படும்போது, நேசிப்பவர் உயிரோடு இல்லையென்றாலும், உடம்பின் தோல் போல ஒரு பாதுகாப்பை அளித்துக் கொண்டே இருக்கும். வெறுப்பு, பேராசை, பெருவேட்கை ஆகியவற்றால் தீய நோக்கத்துடன் தொடுபவருக்கு கடும் வேதனையை அளிப்பதாக அது மாறிவிடும்” என்கிறார் அவர்.
   ஆம்! நாம் ஒவ்வொருவரும் பெற்றோரின் அன்பாசிகளால் தான் உயிர்த்திருக்கிறோம்; சுகித்திருக்கிறோம்... அல்லவா...! “ஏதோ, அப்பன் பாட்டன் செய்த புண்ணியம்!” என்னும் கிராமத்து சொற்றொடருக்குள் அடக்கிவிடலாமல்லவா இக்கருத்தை! நிச்சயமாக! 
     தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்! இதுவே இந்நாவலின் சாராம்சமும். மாயாஜால மந்திர வித்தைகளுக்கும் சில தர்மநியாயங்கள் உண்டென்பதை நிறுவுகிறது இந்நாவல்.
     இலட்சோப லட்சம் பிரதிகள் விற்பனையாகி, கோடிக்கணக்கில் ஜே.கே.ரோலிங் சம்பாதித்தது எதனால் என்பது நாவலைப்  படித்து முடிக்கும் போது நமக்குப் புலப்படுகிறது.

ஹாரி பாட்டரும் ரசவாதக் கல்லும்

நூல் பெயர்: ஹாரிபாட்டரும் ரசவாதக் கல்லும்
மூல மொழி: ஆங்கிலம்
மூல நூலாசிரியர்: ஜே.கே.ரோலிங்
தமிழில்: பி.எஸ்.வி. குமாரசாமி
வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
பக்கங்கள்: 341
விலை: ரூ. 299/-

5 கருத்துரைகள்:

  1. புத்தக விமர்சனம் அருமை.

  1. உன் அம்மா உன்மீது வைத்திருந்த அன்பின் சக்தி வெளிப்பார்வைக்குத் தெரியாமல் உன்னைப் பாதுகாக்கும் கவசமானது. ஆழமாக நேசிக்கப் படும்போது, நேசிப்பவர் உயிரோடு இல்லையென்றாலும், உடம்பின் தோல் போல ஒரு பாதுகாப்பை அளித்துக் கொண்டே இருக்கும். //

    உண்மை . தாயின் அன்பு பாதுகாப்பு கவசம்தான்.

  1. சிறுவர் இலக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு அற்புதக் கதையை தமிழாக்கி நம் தமிழ்க் குழந்தைகளின் வாசிப்புக்கு ஊக்கம் அளிக்கும் நல்லதொரு முயற்சிக்காக பி.எஸ்.வி.குமாரசாமி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன் நிலாமகள். நூல் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  1. நல்லதொரு நூல் அறிமுகம். ஆங்கிலத்தில் ஒரு சில பகுதிகள் படித்திருக்கிறேன். தமிழில் படிக்கத் தூண்டியது உங்கள் பதிவு. நன்றி.

  1. நிலா! புத்தக விமர்சனம் ஒரு அற்புதமான எழுத்து வகை. அனைவருக்கும் அது வாய்ப்பதில்லை. தன் கருத்துகளையும்,சார்புநிலையையும் பக்கலில் வைத்து புத்தகத்தின் மையச்சரடைப் பற்றியபடி ஆக்கபூர்வமாக செய்யப்படுவதே நல்ல விமரிசனம். அதைப்படிப்பவனுக்கு மட்டுமல்ல, படைத்தவனுக்கும் பாதை வெளிச்சம் இருத்தல் வேண்டும். உங்களிடம் அதற்கான எளிமையும் கூர்மையும் இருக்கிறது. நல்ல நூல்களை விமரிசனம் செய்யுங்கள் . விமரிசனம் மட்டுமே உங்கள் துறையானாலும் நன்றே! வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar