நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மரம் வளர்த்த மனிதனின் கதை... பகுதி-2

Thursday, 31 October 2013


         அந்த கிராமம் அப்படியொன்றும் பெரியதாய் மாறியிருக்கவில்லை. எனினும், கைவிடப்பட்ட அந்த கிராமத்திற்கு அப்பால் தொலைதூரத்தில் ஒரு மலைமுகட்டின் மேல் சாம்பல் பூசிய மூடுபனியைப் போன்ற ஒன்று போர்வையாய் மூடியிருந்தது.
அப்போதுதான் மரங்களை நட்ட அந்த இடையரின் நினைவு எனக்கு வந்தது.
இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அந்த 10,000 ஓக் மரங்கள் பற்றி ஞாபகம் வந்தது. அவைகள் இன்றைய நாள் வரை வளர்ந்திருந்தால் நிறைய இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனிதர்கள் இறந்து போய் விட்டார்கள். அந்த ஆட்டுக்காரர் ‘எல்சியர்டு பூபியர்' கூட ஒருவேளை இறந்திருக்கலாம்.
குறிப்பாக நமக்கு 20 வயதாகும் போது 50 வயது மனிதர்களைப் பழமைவாதிகள் என்று சொல்லி விடுகிறோம். என்ன செய்வது... அதற்கு மேல் சாக வேண்டியதுதான். ஆனால் அவர் சாகவில்லை!
தன் பழைய தொழிலை மாற்றிக் கொண்டுவிட்டார். தற்போது அவரது கிடையில் வெறும் நான்கே நான்கு ஆடுகள் தான் இருக்கின்றன. ஆனால், 100 தேனீக் கூடுகள் வைத்திருக்கிறார். தற்போது ஆடுகள் மேய்க்கும் வேலையை விட்டுவிட்டார். ஏனென்றால், ஆடுகள் இளம் ஓக் கன்றுகளின் வளர்ச்சியைப் பாதித்தன.
நடந்து முடிந்த உலகப் போர் அவருக்கு இடையூறாய் இருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னுடைய மரம் நடும் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
1910-ம் வருடம் நட்ட ஓக் கன்றுகளுக்கு இப்போது பத்து வயதாகிவிட்டது. என்னை விட அவை உயரமாக நிற்கின்றன. என்ன ஒரு அருமையான காட்சி!
என்னிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. அவர் வளர்த்த காட்டின் ஊடாக அந்த நாள் முழுவதும் நடந்து கொண்டிருந்தோம். 11 கி.மீ. நீளத்துக்கு 3 பாத்தி வரிசைகளில் ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. அவை 3 கி.மீ. தூரம் பரவி இருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிறது.  இவ்வளவு பெரிய வேலை ஒரு தனிமனிதனின் உழைப்பு. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. எந்த எந்திர உதவியும் இல்லாத உழைப்பு.
மனிதர்கள் தெய்வமாக மாற முடியும் என்பதை அன்று உணர்ந்தேன்.
கடும் உழைப்பு; அழிவுக்கு எதிரான உழைப்பு.
அவர் கண்ட கனவை அவரே நனவாக்கினார்.
புங்க மரங்கள் என் தோள் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. என் கண்களுக்கு எட்டும் தூரம் வரை பசுமையாக ஓக் மரங்கள் உறுதியாய் தலைநிமிர்ந்து நின்றிருந்தன.
இவைகளே சாட்சிகள்!
இவைகள் வளர எலிகளின், வேர்க் கரையான்களின், இயற்கையின் கருணையும் ஒரு காரணமல்லவா?
இயற்கையைப் பொறுத்தவரை இந்த அரிய வளத்தை இம்மனிதனின் சாதனையை முறியடிக்க சுழன்றடிக்கும் ஒரு சூறாவளி போதுமானது.
பின்னர் அவர் என்னிடம் ஐந்து சிறிய சோலைகளைக் காட்டினார். அவை 1915-ல் பயிரிடப்பட்டவை என்றார். அந்த ஆண்டு நான் ‘வெர்டூன்' பகுதியில் போரில் ஈடுபட்டிருந்தேன்.
பள்ளமான எல்லா இடங்களிலும் அவர் விதைகள் போட்டிருந்தார். அவர் நினைத்தபடியே மண்படுகையின் அடியில் ஈரம் இருந்திருக்கவேண்டும்.
அந்த சோலைகள் குழந்தைகளைப் போல் இளமையுடன் மிருதுவாக காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. உறுதியாக நின்றன. இயல்பாக வளர்ந்ததைப் போல் அவை தோற்றமளித்தன.
அவர் சஞ்சலமற்ற தனது இடைவிடாத உழைப்பால் தன் இலக்குகளின் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தார். 
நான் கிராமத்தை விட்டுக் கீழிறங்கி நடந்த போது ஓடைகள் நிரம்பிய நீரோடு ஓடி வருவதைப் பார்த்தேன்.
எப்போதும் காய்ந்து கிடந்த அந்த மண்ணின் ஈரப்பதத்தின் அற்புத உயிரோட்டம்.
இதுதான் இயற்கையின் இயல்பான சுழற்சியில் வெளிப்படும் அதிசயம். இந்த அதிசயத்தை நான் பார்த்ததேயில்லை. நீண்ட காலத்துக்குப் பின் நீர்த் தாங்கல்கள் நிரம்பியுள்ளன. கைவிடப்பட்ட கிராமங்களாயிருந்தவைகளில் இப்போது சிலர் ரோமானிய சாயலில் வீடுகள் கட்டுகிறார்கள்.
தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கிருந்து மீன்பிடி தூண்டில்களைத் தோண்டி எடுத்து இருந்தார்கள். அவை 20 ம் நூற்றாண்டில் உள்ளதைப் போலவே இருந்ததாம்.
அந்தக் கிராமத்தில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் குழாய் இணைப்புகளின் மூலமாக நடைபெறுகிறது. வேகமாக வீசும் காற்று மரத்திலிருந்த முற்றிய விதைகளை உதிர்த்து விடுகிறது. ஆங்காங்கே விழுந்த விதைகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.
வில்லோ மரங்கள், நாணல் புதர்கள், பசும் புல்வெளிகள், பூக்கள் வளர்கின்றன. வாழ்வுக்கான அர்த்தம் தான் என்ன என்பது இவ்வாறு வெளிப்படுகிறது. இவையெல்லாம் மெதுவாக நடந்தேறின. ஆனால் அவை உடனே பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
முயல் அல்லது காட்டுப் பன்றிகளை வேட்டையாட வருபவர்கள் மலைகளின் முகடுகளுக்கு வரும்போது காட்டில் உள்ள சிறுமரங்களைப் பார்த்து ஏதோ இயற்கையின் கொடை என்று அதிசயிக்கின்றனர்.
அதனால் தானோ என்னவோ இடையரின் கடின உழைப்பிற்கு ஒருவரும் அங்கீகாரம் கொடுக்கவில்லை.
நல்லவேளை யாராவது ஒரு மனிதருக்கு சந்தேகம் வந்திருந்தாலும் இன்னொருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருப்பார்.
ஆனால், யார் தான் அவரைப் பற்றி நினைப்பது?
அந்தக் கிராமங்களின் மனிதர்கள் அல்லது அந்தப் பகுதி அதிகாரிகள் யாராவது இடையரின் தொடர்ந்த உன்னதமான இலட்சிய உழைப்பை கற்பனை செய்து பார்த்திருப்பார்களா?
1920 முதல் ஒவ்வொரு ஆண்டும் நான் அவரைப் பார்க்க வருவேன். அவர் எப்போதும் போலவே இருந்தார்.
சோர்வடையாத மனம், இளகாத விடாமுயற்சி, கடவுளுக்குத் தான் தெரியும். சொர்க்கமே இவருக்கு எதிராக இருக்கிறதென்று.
அவருடைய மனப்போராட்டங்கள் வேதனைகள் குறித்து நான் கற்பனை செய்தது கூட இல்லை.
இத்தகைய சாதனைகளுக்காக அவர் நிறைய இடையூறுகளைச் சந்தித்திருக்கக் கூடும். இந்த அமைதிப் புரட்சிக்காக அவர் ஏராளமான இன்னல்களைத் தாங்கி அவநம்பிக்கையை எதிர்கொண்டும் வெற்றி பெற்றிருக்கக் கூடும். இந்த அசாதாரண மனிதன் இந்தச் சாதனையைச் சாதிக்க முழுமனதோடு தன்னந்தனியாக உழைத்தார். தன் வாழ்வின் இறுதி வரை உழைத்தார். இதற்காகப் பேச்சையே துறந்தார். ஏனெனில் உழைக்கும் அவருக்குப் பேச்சு தேவையற்றதாய் இருந்தது.
ரொம்ப நாள் கழித்து 1933-ல் காட்டிலாகா அதிகாரி ஒருவர் அவரைச் சந்தித்தார். வனப்பகுதியில் குப்பையை எரித்தல் தடைசெய்யப் பட்டுள்ளது என்று அறிவுறுத்தினார். அந்தத் தீ இயற்கையாய் உருவான காட்டை அழித்துவிடக் கூடியதாம். இயற்கையாகவே உருவான இது போன்றதொரு அற்புதமான காட்டை என் வாழ்வில் தான் பார்த்ததே இல்லை என்றார்.
1935-ல் இயற்கைக் காட்டைப் பார்க்க அரசு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு வந்தார்கள்.
அவர்கள் உரையாடல் முழுவதும் அந்த இயற்கைக் காட்டைப் பற்றியே இருந்தது. ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரே ஒரு நல்ல தீர்மானம் போட்டார்கள். யாரோ உருவாக்கிய காட்டை அரசின் பாதுகாப்பில் ஒப்படைத்தார்கள்.
அப்போதுதான் மரக்கரித் துண்டுகள் உற்பத்தி செய்வது தடைசெய்யப் பட்டது. இது போல் ஒரு காடு இயற்கையாக உருவாகியிருக்க முடியாது. யாரோ ஒருவரின் கடின உழைப்பு என்று சொல்லக் கூட காட்டிலாகா அதிகாரி யாருக்கும் அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லத் தோன்றவில்லை.
அந்த உயர்மட்ட காட்டிலாகா அதிகாரிகளின் குழுவில் என் நண்பர் ஒருவர் இருந்தார். என் நண்பருக்கு எல்லாம் சரியாகப் புலப்பட்டது. இந்த அதிசயத்திற்கான இரகசியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். 
பின்பு, ஒருநாள் அவரும் நானும் ‘எல்சியர்டு பூபியரை' பார்க்கச் சென்றோம்.
 
-மேலும் வளரும்....


...இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில் 
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா 
ஒரே ஒரு செடி 
வேரடி மண்ணில்.
       - கல்யாண்ஜி 

நிறமில்லாத இரத்தம்


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..

-ப. தியாகு (http://pa-thiyagu.blogspot.in/)

6 கருத்துரைகள்:

 1. /// ஒரு காடு இயற்கையாக உருவாகியிருக்க முடியாது.///

  சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

  நல்ல கவிதை...

 1. இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  என்றும் சொர்க்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

 1. //வேகமாக வீசும் காற்று மரத்திலிருந்த முற்றிய விதைகளை உதிர்த்து விடுகிறது. ஆங்காங்கே விழுந்த விதைகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.//

  அருமை.

  இறுதியில் சொல்லியுள்ள கவிதையும் யோசிக்க வைக்கிறது.
  பாராட்டுக்கள்.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

 1. நிலாமகள் மேடம், மிக உருக்கமாகப் போய்க்கொண்டிருப்பதாக உணர்கிறேன் இந்தப் பத்தி. கலயாண்ஜியின் கவிதை இன்னும் விளாசுகிறது. இயற்கையை, அதிலும் மரங்களைப்பற்றிய அக்கறை படைப்பாளிகளிடமே தூக்கலாயிருப்பது விஷேசமானது. விழிப்புணர்வை அவர்கள்தாம் பிறரிடம் கொண்டு சேர்க்க அதிகம் உழைப்பவர்கள் என்று நம்புகிறேன். ஏதோ, கோவையின் மிக முக்கியமான சாலை அவினாசி நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கில் மரங்களை கொய்து சாய்த்ததை மனம் தாங்கிக்கொள்ளாமல் நான் எழுதிய இக்கவிதையை உங்களின் இந்த நற்செயலோடு சேர்த்துவிடுகிறேன் http://pa-thiyagu.blogspot.in/2011/11/blog-post.html பகிர்வுக்கு நன்றி மேடம்.

 1. shanmugavel said...:

  மிக்க நன்றி.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 1. தீபாவளி வாழ்த்துக்கள் நிலா.

  நலமா இருக்கிறீர்களா?

  அண்மையில் தான் பார்த்தேன். யாரோ ஒருவர் எழுதி இருந்தார் எதிலோ.

  செடிகளுக்கு நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம்.
  தண்ணீர் தெளிச்சு விட்டிடுங்கோ

  என்ற மாதிரியாக!

  காலத்துக்கு ஏற்ற பதிவு.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar