நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

உயிரின் உயிரே...

Sunday, 12 May 2013

           நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது (1985) எனது தந்தையார் மரணிக்கிறார் திடீரென. தன் 63 வருட வாழ்நாளில் சம்பாதித்த பெயர், புகழ், பணம், சொத்து, சுகம், மனைவி குழந்தைகளை விட்டு விடுதலையானது அவரது ஆன்மா. சம்பிரதாயச் சடங்குகள் முறையாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எங்கள் கிராமத்து முதியோரின் வழிகாட்டலின்படி. மயானம் செல்ல வாசலில் தயாராய் அப்பாவின் உடல். உறவினர்களோடு மும்முறை வலம் வந்து விழுந்து வணங்குகிறோம். கூட்டம் சிறு அதிர்வோடு சலசலத்து அமைதியாகிறது. ஏனெனில் மூன்றாவது சுற்றில் யாரும் எதிர்பாரா தருணத்தில், எனது அம்மா தனது திருமாங்கல்யச் சரடை கழற்றி அப்பா கையில் போட்டுவிட்டார்! பதினாறாம் நாள் காரியத்துக்கு முன் இரவில் அதற்கான சடங்குகள் எல்லாம் அந்தரத்தில்! 

பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக் கிளம்பியபடிதான் இருக்கின்றன.

தன் இருபது வயதில் நாற்பது வயது தாய்மாமனுக்கு இரண்டாம தாரமாக வாழ்க்கைப்பட்ட அம்மாவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வேகமும் விவேகமும்?! அவர் கடந்து வந்த வாழ்வல்லவா அவர் சிந்தனையை புடமிட்டு மெருகேற்றியிருக்கக் கூடும்! எங்க ஊரில் அதுவரை கணவரை இழந்த பெண்கள் சிவப்பிலோ வெண்மையிலோ நூல் சேலை அணிந்திருக்க அப்புடவை நிறத்தை பொடிக்கலருக்கு மாற்றிக் கொண்ட அம்மாவுக்குப் பின் கணவனை இழந்த பெண்கள் அதையே பின்பற்றினர். ஆக,  சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும்  துணிவுதான் வேண்டியிருக்கிறது. மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது...

         ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். 

என் சுவாசக் காற்றிலும்
நான் பருகும் நீரிலும்
உலகை தினந்தினம் 
ஒளியூட்டும் பகலவனிலும்
கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்
பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்
அணுத்தொகுப்பாய்
அடிமனசில் அருவுருவாய்
உயிர்த்திருக்கிறாய் அம்மா...
என்னுயிர் உள்ளமட்டும்!


12 கருத்துரைகள்:

 1. /// மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருக்குள்ளும் உள்ளது... ///

  இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

 1. // ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். //

  நிச்சயமாக இருக்கக்கூடும்.

  //என் சுவாசக் காற்றிலும்
  நான் பருகும் நீரிலும்
  உலகை தினந்தினம்
  ஒளியூட்டும் பகலவனிலும்
  கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
  காதுக்கெட்டும் கோயில் மணியின்
  ஓம்கார ஒலியிலும்
  பாதையெங்கும்
  மிதிபடும் மண்ணிலும்
  அணுத்தொகுப்பாய்
  அடிமனசில் அருவுருவாய்
  உயிர்த்திருக்கிறாய் அம்மா...
  என்னுயிர் உள்ளமட்டும்!//

  மிகவும் அழகான அர்த்தமுள்ள [ பாடல் ] படைப்பு.

  >>>>>

 1. படிக்கும் போதே மனம் கனத்துப்போனது.

  சமூக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளன.

  மேலும் மக்கள் மனம் மாறட்டும்.

  யார் மனதும் புண்படாமல் எல்லாமே நல்லதாக நடக்கட்டும்.

  அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

 1. அம்மாவைப்பற்றி படிக்கும் போது மனது கனத்து போனது.
  மாற்றங்களை கொண்டு வந்தமைக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.
  ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதற்கு அவரின் பங்கு வாழ்த்துக்குரியது.

  அடிமனசில் அருவுருவாய்
  உயிர்த்திருக்கிறாய் அம்மா...
  என்னுயிர் உள்ளமட்டும்!/
  அம்மாவின் நினைவுகள் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும் என்பது உண்மை,
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

 1. பெற்றெடுத்த அன்னைக்கு அன்னையர் தினத்தில் ஒரு நல்ல மகளின் அருமையான நினைவஞ்ச‌லி! கனத்த மனதுடன் நானும் நினைவஞ்சலி செலுத்துகிறேன் நிலா!

 1. அம்மாவுக்கு அஞ்சலி.....

  சிறப்பான கவிதை நிலாமகள்.....

 1. அடிமனசில் அருவுருவாய்
  உயிர்த்திருக்கிறாய் அம்மா...
  என்னுயிர் உள்ளமட்டும்!

  அன்னையர் தின வாழ்த்துகள்..

 1. ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். அவர் வாழ்க உங்களை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி

 1. உங்கள் அம்மாவை எண்ணிப் பெருமை; உங்களை எண்ணிப் பொறாமை.

 1. ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம்.

  மௌனமாய் நிற்கிறேன்.. என்ன பேச.. எதற்கு பேச..

 1. அன்னையைப் பற்றியப் பதிவுண்டாக்கிய அதிர்விலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறேன். பெண்ணியம் என்பதை பேச்சில் அல்ல, செயலில் காட்டிய அன்னை வணக்கத்துக்குரியவர். வணங்குகிறேன் அவரை. அவரது மரபணுக்கள் வழிவழியாய்த் தொடரட்டும்... பெருகட்டும்.

 1. ஹ ர ணி said...:

  அன்புள்ள நிலாமகள்..

  சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கும் அம்மாவின் இந்தத் துணிச்சல் 20 வயதில் தள்ளப்பட்ட சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மனத்தில் கனன்றது வெடித்திருக்கிறது பெண்ணிய நெருப்பாய். எங்கள் பக்கத்துத் தெருவில் இப்படித்தான் ஒரு பெண்மணி தன்னுடைய தந்தை இறந்தபோது பொறுப்பில்லாத சகோதரர்களை உதாசீனம் செய்துவிட்டு பலரும் தடுக்க மீறிக்கொண்டு தணிச்சலுடன் இடுகாட்டில் தன்னுடைய தந்தைக்கு கொள்ளி வைத்தது நினைவிலிருக்கிறது. நெகிழவைத்த பதிவு. ஆதிலட்சுமி நிலாமகள் ஆனதில் இந்த கோபம்தான் உருவாக்கமாக நின்றிருக்கிறது.

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar